வீர சாகசம் புரிந்த போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.

ஊட்டி: ஊட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் வீர சாகசம் புரிந்த போலீஸ் கான்ஸ்டபிள், திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவத்தை நேரில் கண்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு அரங்கில், குடியரசு தின நிகழ்ச்சிகள் நேற்று காலை நடந்தன. போலீசார் சார்பில் பைக் சாகச நிகழ்ச்சி நடந்தது. ஆயுதப்படை கான்ஸ்டபிள் பாண்டியன், பைக்கில் பறந்து சாகசங்களை செய்து, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். பின்னர், ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். கராத்தேயில், “பிளாக் பெல்ட்’ பெற்ற இவர், ஓடுகளை காலால் உதைத்து தூள் தூளாக்கினார். அதன் பின், தரையில் மாணவர்களை வரிசையாக படுக்கச் செய்து, அவர்களைத் தாண்டி சாகசம் புரிந்தார். முதலில் ஐந்து மாணவர்களை படுக்க வைத்து தாண்டி பல்டி அடித்தார். பின், மாணவர்கள் எண்ணிக்கையை 11 ஆக உயர்த்தி பல்டி அடித்தார். பிறகு, 13 மாணவர்களை படுக்க வைத்து அவர்களைத் தாண்டி பல்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

மாணவர்களைத் தாண்டி சாகசத்தை முடிக்கும் தறுவாயில், பாண்டியன் நிலை தடுமாறி, “மேட்’ மீது தலை குத்திய நிலையில் விழுந்தார்; அவரால் எழ முடியவில்லை. ஏதோ நடந்துவிட்டதென உஷாரடைந்து பலரும் ஓடி வந்து அவரை மீட்டனர். எழுந்து நிற்க முடியாத அளவுக்கு, நிலை குலைந்து, கண்கள் மேல் நோக்கிய நிலையில் மயக்கமடைந்திருந்தார். அருகிலிருந்தவர்கள், அவரை உடனடியாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி கதறல்: தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த பாண்டியனுக்கு சத்யா என்ற மனைவியும், ஏழு வயதான ஸ்ரீவர்ஷிணி என்ற மகளும், 11 மாத சுஜித் பாண்டியன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ஆயுதப்படை பிரிவில் டிரைவராக பணியாற்றி வந்தார். பாண்டியனின் உடலுக்கு, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், எஸ்.பி., நிஜாமுதீன் ஆகியோர், அரசு மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினர். சக போலீசார், பாண்டியன் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அப்போது, அருகிலிருந்த பாண்டியனின் மனைவி கதறியதைப் பார்த்து பலரும் கண்ணீர் விட்டனர்.

பார்வையாளர்கள் அதிர்ச்சி: விபத்தின் போது மைதானத்தில் இருந்த ஊட்டியைச் சேர்ந்த பிரதாப் கூறுகையில், “பாண்டியன், ஆரம்பம் முதலே மிகவும் துல்லியமாக சாகசம் புரிந்தார். மாணவர்களை வரிசையாக தரையில் படுக்க வைத்து சாகசம் செய்த போது, தான் தாண்ட வேண்டிய இடைவெளியை சரியான முறையில் கடக்க முடியாமலோ அல்லது தவறான கணிப்பின் காரணமாகவோ, தரை விரிப்பின் முன்புறமாக விழுந்து பல்டி அடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது தலை, உயரமான தரை விரிப்பின் மீது நேரடியாக மோதி சம்பவம் நேரிட்டுவிட்டது. ஆரம்பத்தில், அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றே கருதினோம். அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியில் உறைந்தோம். பல ஆயிரம் பேரின் முன்னிலையில், கைதட்டலுக்கு இடையே அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது, வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்’ என்றார்.

dina malar

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s