குற்றம்: நடப்பது ஏன்?

காலம் கெட்டுப் போச்சு. இப்போது சின்னப் பசங்கதான் அதிகமாகக் குற்றங்களில் ஈடுபடுறாங்க. கடுமையான தண்டனை தந்தாத்தான் அடங்குவாங்க’ இப்படிப் பேசுபவர்கள் இப்போது அதிகமாகிவிட்டார்கள். அதிலும் டெல்லி மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளான கொடுமை நடந்த பிறகு, இப்படிப் பேசுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியல்துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் எம்.சீனிவாசனிடம் இதைப் பற்றிக் கேட்டோம்:

“”குற்றச் செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் தர வேண்டும். தேவைப்பட்டால் சட்டத் திருத்தம் கூட கொண்டு வர வேண்டும் என்று இப்போது நிறையப் பேர் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
தவறு செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்ற நிலை இருந்தால், தவறு செய்ய அஞ்சுவார்கள். ஆனால் கடுமையான தண்டனைகளே தவறு செய்யவிடாமல் தடுத்துவிடுமா? ஏன் இத்தகைய தவறுகளில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள்? என்பதையும் பார்க்க வேண்டும்.
பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதற்குக் காரணமாக வெறும் உடல் தேவையை மட்டுமே சொல்ல முடியாது. பெண்களைச் சமூகம் எப்படி நடத்துகிறது? எப்படி மதிப்பிடுகிறது? ஆண்களை விட, பெண்களைக் கீழானவர்களாகக் கருதும் மனநிலை உள்ளது. ஓர் ஆண் இரவில் கடற்கரையில் தனியாக இருந்தால், யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் ஒரு பெண் அப்படி இருக்க முடியாது. இதற்கு என்ன காரணம்?
பெண்ணை சக மனித உயிர் என்பதாகப் பார்க்கும் பார்வை இப்போது இல்லை. வெறும் உடலாகப் பார்க்கும் பார்வையே உள்ளது. இந்த எண்ணத்தை வளர்த்துவிடுவதைப் போல இன்றையத் திரைப்படக் காட்சிகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உள்ளன. பெண் என்றால் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். இப்படித்தான் உடுத்த வேண்டும். இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்களுக்கு என்று தனியான கட்டுப்பாடுகளை விதிக்கும் சமூக மனோபாவம் இருக்கிறது. அது பெண்களைச் சற்றுக் கீழான நிலையில் வைக்கிறது. அதனால்தான் ஓர் ஆண் எப்படி உடை அணிந்தாலும் பெண்கள் அவர்களைப் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு பெண் சற்று வித்தியாசமான உடை அணிந்தால் எல்லாரும் பார்க்கிறார்கள். கமெண்ட் அடிக்கிறார்கள். எனவே இப்படிப்பட்ட கருத்துகளை மாற்ற வேண்டும். அதற்கு எல்லாரும் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் பெண்களின் மீதான பாலியல் வன்முறைத் தாக்குதல்களைக் குறைக்க முடியும்.
திருட்டு, வழிப்பறி, கொலை போன்ற குற்றச் செயல்களிலும் இளைஞர்கள் ஏன் ஈடுபடுகிறார்கள்? அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யத் தூண்டும் சமூகக் காரணங்கள் எவை? என்று கண்டறிய வேண்டும். அந்தக் காரணங்களை நீக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஓர் இளைஞன் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான் என்றால் முதலில் அவனுடைய குடும்பச் சூழ்நிலை, வளர்ப்பு நன்றாக இருக்காது.
சக மனிதனைத் துன்புறுத்தக் கூடாது என்ற எண்ணம் இளம் வயதினரின் மனதில் அழுத்தமாகப் பதியும்படி நாம் அவர்களை வளர்க்க வேண்டும். கல்வி கற்றுத் தர வேண்டும். மனிதனின் மிருக குணத்தை மனித குணமாக்கும் கலாசார சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
குற்றச் செயல்கள் அதிகரிக்க இன்னொரு காரணம் நுகர்வுக் கலாசாரம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி 30 நிமிடம் என்றால் 10 நிமிடங்கள் விளம்பரங்களே வருகின்றன. “அதை வாங்கு.. இதை வாங்கு’ என்று. “இந்தப் பொருட்கள் இருந்தால் பெருமை’ என்ற எண்ணத்தை அவை உருவாக்குகின்றன. இப்படிப் பரப்பப்படும் நுகர்வுக் கலாசாரமும், பல குற்றச் செயல்களுக்குக் காரணமாகிவிடுகிறது. நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஒன்றிரண்டு பேராவது குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டுதலாக உள்ளது.
நல்ல கல்வியும் வேலை வாய்ப்பும் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாகச் சமூகச் சூழ்நிலை இருக்க வேண்டும். அப்படி இருந்தால், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற பல குற்றங்கள் மிகவும் குறைந்துவிடும்.
அதே சமயம் தவறு செய்தவர்களைத் தண்டனையில் இருந்து தப்பிச் செல்லும்படிவிடக் கூடாது. எந்தத் தப்புச் செய்தாலும் பணம், செல்வாக்கு இருந்தால் தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் குற்றங்களைத் தடுக்க முடியாது.
இளம்வயதினர் நிறையக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதை விட குற்றங்கள் நடைபெறுவதற்கான சமூகச் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்க முயல்வதே சிறந்தது” என்றார்.

-ந.ஜீவா-
நன்றி: தினமணி கதிர்… 20.1.2013

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s