அரங்கேறும் வக்கிரங்கள்!

By தினமணி
First Published : 19 February 2013 02:22 AM IST
இத்தனை நாளும் சமுதாய அவமதிப்புக்கு உள்ளாக நேருமோ என்கிற அச்சத்தில் மௌனமாகத் தங்கள் மீது தொடுக்கப்பட்ட வன்கொடுமையைச் சகித்துக் கொண்டிருந்த பெண்கள், இப்போது துணிந்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த முற்பட்டு வருகிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.

இந்த அளவுக்கு வக்கிரத்தனம் பிடித்த, அப்பாவிப் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தும் அநாகரிகமான சமுதாயமாக நாம் மாறிவிட்டிருக்கிறோமே, அது எதனால்? விவரம் தெரியாத சிறுமியர், தகப்பன், பாட்டன் வயதையொத்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்களை ஜீரணிக்கவே முடியவில்லையே, பிறகல்லவா நடுத்தர வயதினரின் அநாகரிக வக்கிரங்களைப் பற்றி விவாதிக்க!

முறை தவறிய உறவு முறைகள், காரணமே இல்லாத விவாகரத்துகள், அநாகரிகமான உணர்வுகளின் வெளிப்பாடுகள் இவையெல்லாம் மேலைநாட்டு நாகரிகத்தின் கூறுகள் என்று நம்மால் எள்ளி நகையாடப்பட்டதுபோய், மேலைநாட்டார் இந்தியாவை வக்கிரத்தனத்தில் ஊறிப் போயிருக்கும் தேசம் என்று முகம் சுளிக்கும் அளவுக்கு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்திய நாகரிகத்தின் மிகப்பெரிய பலமாகவும், உயர்வாகவும் கருதப்பட்ட தாய்மைக்கும் பெண்மைக்கும் தரப்பட்ட அங்கீகாரம் எல்லாம் வெறும் போலித்தனமானது என்றல்லவா சமீபத்திய சம்பவங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன…

கடந்த 20 ஆண்டுகளாக, சந்தைப் பொருளாதாரமும், நுகர்வோர் கலாசாரமும் வேரூன்றிவிட்ட நிலையில், ஏற்பட்டிருக்கும் சமுதாய மாற்றங்கள்தான், பெருகி வரும் இந்தப் போக்குக்குக் காரணம் என்று தோன்றுகிறது. குடும்பக் கட்டுக்கோப்புக் குலைந்து, நாகரிகம் என்கிற போர்வையில் ஒழுக்கக் கேடுகள் சமுதாய அங்கீகாரம் பெறத் தொடங்கி இருப்பதும், கல்வி என்பது ஒழுக்கத்தையும், நேர்மையையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் உணர்த்தாமல் வேலைவாய்ப்பை மட்டுமே முன்னிறுத்தி கற்பிக்கப்படுவதும் இந்தப் போக்குக்கு உறுதுணையாக இருக்கின்றன.

இறைநம்பிக்கை குறைந்ததுகூட, இன்றைய வக்கிரத்தனங்களுக்குக் காரணமாக இருக்கக் கூடும். தவறு செய்தால் தெய்வம் தண்டிக்கும் என்கிற அச்ச உணர்வும், சமுதாய ஏளனத்துக்கு நாம் ஆளாக நேரும் என்கிற பயமும் இல்லாமல் போய்விட்ட சூழல், தவறுகளுக்குக் கதவுகளைத் திறந்து வைக்கிறது.

முன்பே ஒருமுறை தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, கற்பைவிட சுகம்தான் பெரிது என்று பெண்களும், ஒழுக்கத்தையும் கௌரவத்தையும்விட பணம் சம்பாதிப்பதுதான் முக்கியம் என்று ஆண்களும் கருதிவிட்டால் அந்தச் சமுதாயத்தைச் சீர்கேடிலிருந்து காப்பாற்றவே முடியாது. ஆனால், அரங்கேறிவரும் பாலியல் கொடுமைகள் ஒருபடி மேலே போய், வக்கிரத்தனத்தை எட்டி விட்டிருப்பதுதான் அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

ஓரினச் சேர்க்கை, திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது, இயற்கையை மீறிய திருமண பந்தங்கள், சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கும்கூட விவாகரத்து என்பவை எல்லாம் சமுதாயத்தில் சர்வ சாதாரணமான நிகழ்வுகளாக மாறிக் கொண்டிருப்பதை நாகரிகம் என்று இந்தியச் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளுமேயானால், அதைவிடப் பெரிய பேராபத்து வேறு எதுவாகவும் இருக்க முடியாது. உலகுக்கு வாழ்ந்து காட்டி வழிகாட்ட வேண்டிய இந்தியா, வழி தவறி வேறு எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறதோ என்கிற அச்சம் ஆட்கொள்கிறது.

அரங்கேறிவரும் இந்த வக்கிரங்களுக்கு எல்லாம், நமது ஊடகங்களும் துணை போகின்றன என்பதுதான் நம்மை முகம் சுளிக்க வைக்கிறது. கலையும் இலக்கியமும் இந்தியாவில் மக்களின் மனதைப் பண்படுத்தவும், நாகரிகத்தை மேம்படுத்தவும் பயன்பட்டதுபோய், வியாபாரமாகிவிட்ட விபரீதம்தான் இதற்குக் காரணம். அது திரைப்படங்களாக இருந்தாலும், தொலைக்காட்சி சேனல்களாக இருந்தாலும், தினசரி, வார இதழ்களாக இருந்தாலும், வியாபாரம் என்கிற பெயரில் விரசத்தையும், வக்கிரத்தையும் நாகரிகத்தின் வெளிப்பாடுகளாகச் சித்திரிக்கும் போக்கு, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பரபரப்பை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் 24 மணிநேர செய்திச் சேனல்களும், பத்திரிகை தர்மம், நனிநாகரிகம் பற்றி எல்லாம் கவலையேபடாத வாரம் இருமுறை வெளிவரும் புலனாய்வு இதழ்களும், களவியல் சம்பவங்களையும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு நிகழ்வுகளையும் முன்னிலைப்படுத்தும் தினசரிகளும், சமுதாயத்தில் மலிந்துவரும் சீர்கேடுகளுக்கும் வக்கிரங்களுக்கும் காரணமாக இருக்கின்றன என்பதை யாரால் மறுக்க முடியும்? சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டிய ஊடகங்களே வியாபாரத்திற்காக வக்கிரத்தைக் கடை விரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்தான், அரங்கேறிக் கொண்டிருக்கும் அநாகரிகங்கள்.

மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளும்; தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை அதிகரித்து, சாத்வீக குணத்தை மழுங்கடித்து விடுகின்றன என்கிற உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? அவை மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டிருக்கும் உண்மை.

விரசத்தை வெளிச்சம்போட்டு வியாபாரம் செய்யும் ஊடகங்கள்; ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்காமல் வேலைவாய்ப்புக்காகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே உதவும் கல்விச்சாலைகள்; பாசம் என்கிற பெயரில், குடும்ப உறவுகளையும், நல்ல பண்புகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள், மக்கள் நலனையும், வருங்கால சந்ததிகளையும் பற்றிக் கவலைப்படாமல் அன்னிய முதலீடு கிடைத்தால் போதும் என்று செயல்படும் அரசாங்கம் – வக்கிரங்கள் விஷக்கிருமிகளாய் வளராமல் என்ன செய்யும்?

கருத்து

பதிவுசெய்தவர் Ganapathy 02/19/2013 05:44 இதற்கான பதில் முறையற்ற கருத்து
இதற்க்கு முழுக் காரணமும் அரசாங்கமும் அரசியல் வாதிகளும் ஊடகங்களும் தான். மற்ற படி அசைவம் சாபிடுவது மது அருந்துவது எல்லாம் இல்லை. தனி மனித ஒழுக்கம் இல்லாமையும் தனி மனித சுதந்திரத்தை மதிக்காமையும் , போலித்தனமான கற்பும் போலித்தனமான கலாச்சாரமும் தான் இதற்கு காரணம். அந்த காலத்தில் உணர்ச்சி தூண்டல் என்பது குறைவு .இன்று அணைத்து ஊடகங்களும் வக்கிரத்தையும் வன்முறையும் மட்டுமே செய்தியாக போட்டு மக்கள் மனதை பால் அடித்துள்ளன. முக்கியமாக சன் டிவி கலைஞர் டிவி போன்றவைகளில் என்பது சதவீதம் மோசமான நிகழ்சிகளே. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே. தவறான அரசாங்கம் தவறான அரசியல் வாதிகள். அதே போல் முன் போல சீக்கிரத்தில் திருமணம் நடபதில்லை. ஒழுக்கம் கலாச்சாரம் என்ற பெயரில் வெளிபடையான விபச்சாரத்தையும் அனுபதில்லை. எந்த உணர்ச்சிக்கும் சரியான வடிகால் தேவை.
பதிவுசெய்தவர் ராம் 02/19/2013 05:46 இதற்கான பதில் முறையற்ற கருத்து
ஊடகங்களின் வளர்ச்சியால் இன்று உண்மைகள் உடனுக்குடன் வெளிவருகிறது இதற்கு முன் அதாவது நீங்கள் சொல்லும் 20 வருசத்துக்கும் மேலாக தலித் பெண்களும் மலைவாழ் பெண்களும் அதிகார வர்க்கத்தால் சீரழிக்கப்பட்டது உங்கள் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டதா. உண்மை என்னவென்றால் அப்போது அவர்களுக்கு மட்டுமே நடந்த கொடுமை இப்போது எல்லோருக்கும் நடக்கும் பொது குய்யோ முரே என்று குரல் கேட்கிறது.
பதிவுசெய்தவர் KKsamy 02/19/2013 06:38 இதற்கான பதில் முறையற்ற கருத்து
நல்ல தலையங்கம். முன்னோடியான கலாச்சார பண்பாட்டுச் சமூகமாக இருந்த நிலை மாறி பொருளாதாரத்தை மையமாகக்கொண்ட சமுதாயமாக என்று மாற தொடங்கி விட்டோமோ அன்றே அனைத்து சீர்கேடுகளும் தொடங்கி விட்டன. மதிப்பு என்பது வெறும் பொருளாதார நிலை மட்டும்தான் என்றாகிவிட்டது. காலம் மாறும். இது நம்பிக்கை,
பதிவுசெய்தவர் ச.பாஸ்கரன், தஞ்சை 02/19/2013 07:01 இதற்கான பதில் முறையற்ற கருத்து
நம் கலாசாரத்தை முறையாக நம் சந்ததிகளுக்கு கற்றுத்தர வேண்டும்.ஊடகங்களுக்கு வரைமுறை தேவை.சுயகட்டுப்பாடும் அவசியம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s